ஐப்பசி பூர உற்சவத்தையொட்டி சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்பாள் தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

ஐப்பசி பூர உற்சவத்தையொட்டி சிதம்பரம் சிவகாம சுந்தரி அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-10-20 18:45 GMT

சிதம்பரம்


சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சிவகங்கை குளத்திற்கு எதிரில் சிவகாம சுந்தரி அம்பாளுக்கு தனி சன்னதி உள்ளது. சிவகாம சுந்தரி அம்பாளுக்கு ஆண்டுதோறும் ஐப்பசி பூர உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான ஐப்பசி பூர உற்சவம் கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் இரவில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை அம்பாளுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் சிவகாம சுந்தரி அம்பாள் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு முக்கிய வீதியில் வலம் சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை பட்டு வாங்கும் உற்சவம் மற்றும் பூர சலங்கை உற்சவமும், நாளை(சனிக்கிழமை) காலை தபசு உற்சவம், இரவு சிவானந்த நாயகி சமேத சோமஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்