ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-07-28 16:05 GMT

வால்பாறை

ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி அமாவாசை

வால்பாறை பகுதியில்  ஆடி அமாவாசையை முன்னிட்டு நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் அருள் பாலித்தார்.கோவில் வளாகத்தில் உள்ள சிவன் கோவிலிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தினார்கள். இதே போல் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

கிணத்துக்கடவு

 கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் மாரியம்மனுக்கு பால், தேன், பன்னீர், எலுமிச்சை, இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு அலங்காரம் நடைபெற்றது.இதில் சூலக்கல் மாரியம்மன் விபூதி அலங்காரத்தில் மலர், மாலைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று ஆடி அமாவாசை என்பதால் சூலக்கல் மாரியம்மனை தரிசனம் செய்ய கோவை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கேரளா மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சுந்தரராசு செய்திருந்தார். பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் வடக்கி பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் கிணத்துக்கடவில் உள்ள பிளேக் மாரியம்மன், கரியகாளியம்மன்,சிவலோகநாயகி ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மாசாணியம்மன் கோவில்

ஆனைமலை உப்பாற்றங்கரையில் சயன நிலையில் மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை யொட்டி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் ஆனைமலை உப்பாற்று மற்றும் ஆழியாறு ஆற்றிலும் நீராடிய பக்தர்கள் முதல் கால பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். மேலும் உச்சிபூஜை , சாயரட்ச பூஜை ,தங்கமலர் அர்ச்சனை உள்ளிட்ட பூஜையில் ஏராளமான பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். கோவில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதானத்திலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஆனைமலை போலீசார் மற்றும் ஊர் காவலர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் விஜயலட்சுமி மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்