கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்களை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம்-வாகன ஓட்டிகள் பீதி

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்களை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம் செய்தது. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

Update: 2022-10-13 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்களை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம் செய்தது. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

காட்டு யானைகள் முகாம்

கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் உள்ள பலா மரங்களில் காய்த்திருந்த பழங்களை திண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் வந்து முகாமிட்டு பழங்களை உண்டு, சீசன் முடிந்தவுடன் மீண்டும் சமவெளிப் பகுதிகளுக்கு திரும்பிச் செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பலாப் பழ சீசன் முடிந்தும் கூட காட்டு யானைகள் சமவெளிப் பகுதிக்கு திரும்பிச் செல்லாமல் இதே பகுதியில் முகாமிட்டுள்ளன. முள்ளூர் பகுதியில் 3 குட்டிகளுடன் 2 பெண் யானைகள், தட்டபள்ளம் பகுதியில் ஒற்றை ஆண் யானை, 2-வது கொண்டை ஊசி வளைவில் 2 குட்டிகளுடன் ஒரு பெண் யானை என காட்டு யானைகள் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலைகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி உலா வந்த வண்ணம் உள்ளன.

சுற்றுலா வேன் சேதம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் பகுதிக்கு இறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு பயணிகள் 20 பேரை அழைத்துச் சென்று, கோத்தகிரிக்கு திரும்பி வந்து கொண்டிருந்த அரவேனு தவிட்டுமேடு கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் என்பவரது சுற்றுலா வேனை காட்டு யானை ஒன்று தட்டப்பள்ளம் பகுதியில் சாலையின் குறுக்கே நின்று வழி மறித்தது. சாலையின் குறுக்கே யானை நிற்பதைக் கண்ட டிரைவர் வெள்ளையன், அச்சமடைந்ததுடன் விளக்குகளை அணைத்து சற்று தொலைவில் வேனை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார். ஆனால் திடீரென வேனை நோக்கி ஓடி வந்த காட்டு யானை, தனது தந்தத்தால் வேனின் கண்ணாடியை குத்தி உடைத்து சேதப்படுத்தியது.

அதிர்ச்சியில் உறைந்தனர்

இதைக் கண்டு அச்சமடைந்த வேனில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வேனில் இருந்து இறங்கி ஓடினர். இந்த சம்பவம் காரணமாக வாகன போக்குவரத்து தடைபட்டதால், சாலையின் இரு புறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் அதே சாலையில் சென்ற காட்டு யானை அவ்வழியாக வந்த கார் ஒன்றை தனது தந்தத்தால் குத்தி சேதப்படுத்தி, தூக்கி சாலையில் கவிழ்க்க முயற்சி செய்தது. இதன் காரணமாக காருக்குள் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.இதைக் கண்டு அச்சமடைந்த பின்னால் கார்களில் வந்த வாகன ஓட்டிகள், அதி வேகத்தில் காரை இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் சற்று நேரம் சாலையில் நின்றுக் கொண்டிருந்த காட்டு யானை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றது. யானை சென்ற பின்னர் மற்ற வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. காட்டு யானை அட்டகாசத்தால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்