கோத்தகிரி அருகே வீட்டு வளாகத்தில் உலா வந்த கரடிகள்-சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
கோத்தகிரி அருகே வீட்டு வளாகத்தில் கரடிகள் உலா வந்தன. இதுதொடர்பான சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே வீட்டு வளாகத்தில் கரடிகள் உலா வந்தன. இதுதொடர்பான சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது.
2 கரடிகள்
கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் உள்ள பெரியார் நகர் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியாக உள்ளதால் இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலையில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு 2 கரடிகள் அங்குள்ள சாலை வழியாக நடந்து சென்றன. பின்னர் கரடிகள் அப்பகுதியில் உள்ள வீட்டின் பாதுகாப்பு சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றன.
விளையாடின
கரடிகளின் சத்தம் கேட்ட வீட்டின் உரிமையாளர் விளக்கை ஒளிரச் செய்து வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் பார்த்தபோது கரடிகள் வீட்டின் வாசலில் உலா வந்ததோடு விளையாடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். நீண்ட நேரம் அங்கேயே இருந்த கரடிகள் பின்னர் மீண்டும் பாதுகாப்பு சுற்றுச்சுவரை தாண்டி குதித்து அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றன. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த மாதம் 11 ஆம் தேதி இதே வீட்டை ஒட்டிய சாலையில் கருஞ்சிறுத்தைகள் மற்றும் சிறுத்தைகள் நள்ளிரவில் உலா வந்தன.
இந்நிலையில் கரடிகளும் இதே பகுதியில் உலா வருவதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.