கடலூர்-சிதம்பரம் வழித்தடத்தில் கிராமங்களில் நிற்காமல் செல்லும் பஸ்கள் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

கடலூர்-சிதம்பரம் வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் பஸ்கள் நிற்காமல் செல்கிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-27 19:38 GMT

கடலூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று சிதம்பரம். மேலும் வடமாநிலங்கள் மற்றும் வடமாவட்டங்களில் இருந்து கடலூர் வழியாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள் அனைவரும் சிதம்பரம் வழியாக தான் சென்று வருகின்றனர். இதனால் கடலூர்-சிதம்பரம் இடையே 15 நிமிடத்திற்கு ஒரு பஸ் என்ற வகையில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஆனால் கடலூரில் இருந்து புறப்படும் பஸ்கள் முதுநகரில் மட்டுமே நின்று பயணிகளை ஏற்றி இறக்குகின்றன. அதன் பிறகு ஆலப்பாக்கம் ரெயில்வே கேட் நிறுத்தத்தில் மட்டும் நின்று விட்டு, சிதம்பரம் சென்று விடுகிறது. அதேபோல் மறுமார்க்கத்தில் சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வரும் பஸ்களும் ஆலப்பாக்கம் மற்றும் கடலூர் முதுநகர் பஸ் நிறுத்தங்களில் மட்டுமே நிற்கின்றன.

பரிதவிக்கும் மக்கள்

இதனால் கடலூர் -சிதம்பரம் வழித்தடத்தில் உள்ள பல்வேறு கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைக்கும் கூட பஸ்களில் கடலூர், சிதம்பரம் செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர். குறிப்பாக கடலூர் முதுநகர் அடுத்த பச்சையாங்குப்பம், சிப்காட், குடிகாடு, காரைக்காடு, சங்கொலிகுப்பம், செம்மங்குப்பம், சோனஞ்சாவடி, பூண்டியாங்குப்பம், ஆலப்பாக்கம், பூவாணிக்குப்பம், பெரியப்பட்டு, மேட்டுப்பாளையம், கொத்தட்டை, பெரியகுமட்டி உள்ளிட்ட கடலூர்-சிதம்பரம் சாலையோரம் வசிக்கும் கிராம பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்டவற்றுக்கு செல்ல வேண்டுமானால் சிதம்பரம், கடலூருக்கு தான் வர வேண்டும். அதுபோல் அப்பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளும் சிதம்பரம், கடலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தான் படித்து வருகின்றனர்.

ஆனால் கடலூர்-சிதம்பரம் இடையே கிராம பகுதிகளில் உள்ள ஒரு நிறுத்தங்களில் கூட பஸ்கள் நிற்காததால், பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் தினம்தினம் அல்லல்படுகின்றனர். சிலர் மோட்டார் சைக்கிள்களிலும், ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தி நீண்ட தொலைவில் உள்ள ஆலப்பாக்கம் ரெயில்வே கேட் அருகில் சென்று சிதம்பரம், கடலூருக்கு பஸ் ஏறி செல்கின்றனர்.

ஊருக்குள்ளே முடங்கும் மக்கள்

இதனால் அப்பகுதி மக்களுக்கு காலவிரயம் ஆவதுடன், அதிக பணம் செலவாகிறது. அதிலும் இரவு நேரம் ஆலப்பாக்கத்தில் இறங்கி, மோட்டார் சைக்கிளில் கடலூர்-சிதம்பரம் சாலையில் செல்லும் போது, அதிவேகமாக செல்லும் வாகனங்களால் பலர் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் ஊருக்குள்ளே முடங்கும் நிலை உள்ளது. இதில் முதியோர்களும், கர்ப்பிணிகளும் ஆஸ்பத்திரிகளுக்கு கூட உடனுக்குடன் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்தும், இதுவரை மக்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. எனவே இனியாவது காலம் தாழ்த்தாமல் மேற்கண்ட பகுதிகளில் அரசு பஸ்கள் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

4 டவுன் பஸ்கள்

சங்கொலிகுப்பம் சங்கர்: கடலூர்-சிதம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இடையே முதுநகர் மற்றும் ஆலப்பாக்கம் நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் சிதம்பரம்-கடலூர் சாலையில் உள்ள பல்வேறு கிராம மக்கள் அவசரத்திற்கு கூட சிதம்பரம், கடலூருக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அதனால் பச்சையாங்குப்பம், சிப்காட், குடிகாடு, காரைக்காடு, சங்கொலிக்குப்பம், செம்மங்குப்பம், சோனஞ்சாவடி, பூண்டியாங்குப்பம், பூவாணிக்குப்பம், பெரியப்பட்டு, மேட்டுப்பாளையம், சிலம்பிமங்களம், புதுச்சத்திரம், கொத்தட்டை, பெரியகுமட்டி, முட்லூர் ஆகிய பகுதிகளில் நின்று செல்லும் வகையில் தினசரி 4 அரசு டவுன் பஸ்களையாவது இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை

சிப்காட் செல்வமுருகன்: கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள், சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர். அதுபோல் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பலர், கடலூர், சிதம்பரத்தில் உள்ள தொழில்நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரிகின்றனர். ஆனால் இப்பகுதியில் ஒரு சில தனியார் பஸ்கள் மட்டுமே நிற்கின்றன. அரசு பஸ்கள் ஒன்று கூட நிற்பதில்லை. பஸ் வசதி இல்லாததால், கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதிகளுக்கு சென்று வரவே ஒரு நாள் ஆகி விடுகிறது. அரசு பஸ்களில் எங்கள் ஊர் பெயரை சொன்னாலே, பஸ்களில் இருந்து இறக்கி விடுகின்றனர். அதனால் அனைத்து பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம பகுதிகள் புறக்கணிப்பு

சிதம்பரம் பன்னீர்செல்வம்: நான் சிதம்பரத்தில் இருந்து வேலைக்காக தினசரி சிப்காட் சென்று வருகிறேன். ஆனால் எந்த பஸ்களும் சிப்காட்டில் நிற்பதில்லை. சில தனியார் பஸ்கள் மட்டும் நிற்பதால், அந்த பஸ்களுக்காக மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டி உள்ளது. இல்லையெனில் ஆலப்பாக்கம் வரை பஸ்களில் சென்று விட்டு, அங்கிருந்து யாரிடமாவது மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் தினந்தோறும் கடும் அவதியடைந்து வருகிறேன். அரசு பஸ்கள் அனைத்தும் கிராம பகுதிகளை பல ஆண்டுகளாக புறக்கணிக்கின்றன. அதனால் பொதுமக்கள் நலன்கருதி, கிராம பகுதிகளில் நின்று செல்லும் வகையில் டவுன் பஸ்களையாவது குறிப்பிட்ட நேரத்தில் இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்