கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்தில்300 மீனவ கிராமங்கள் விடுபட்டுள்ளதாக மீனவர்கள் பரபரப்பு புகார்
கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்தில் 300 மீனவ கிராமங்கள் விடுபட்டுள்ளதாக மீனவர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.
கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்தில் 300 மீனவ கிராமங்கள் விடுபட்டுள்ளதாக மீனவர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீனவர்களின் கருத்துக்களை கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் செந்தில்ராஜ் உறுதி அளித்தார்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு நவ. 4-ந் தேதி மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டது. 9 மாதங்களுக்கு பிறகு நேற்று மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், உதவி கலெக்டர் கவுரவ்குமார், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மீனவ கிராமங்கள் விடுதல்
கூட்டத்தில் மீனவர்கள் ேபசுகையில், கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் மற்றும் மீனவ கிராமங்களில் உள்ள ஆலயங்கள், மீன் ஏலகூடம் உள்ளிட்ட பொது இடங்கள் விடுபட்டு உள்ளன. பெரும் முதலாளிகள், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது. மீனவர்களின் கருத்துக்களை கேட்காமல் இந்த வரைபடத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது. மேலும், கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடம் தொடர்பாக மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் பாரம்பரிய மீனவர்கள் தரப்பில் இடம் பெற்றுள்ள 3 பேர் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பழையகாயல் கடற்கரை முகத்துவாரத்தை தூர்வார வேண்டும். கொம்புதுறை ஊர் பெயரை மாற்றக்கூடாது. மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை தவறாமல் நடத்த வேண்டும், என்று வலியுறுத்தினர்.
கலெக்டர் செந்தில்ராஜ்
இதற்கு பதில் அளித்து கலெக்டர் செந்தில்ராஜ் பேசுகையில், கடந்த மூன்று மாதங்களாக மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்த முயற்சி செய்தும், பல்வேறு காரணங்களால் நடத்த முடியாமல் போய்விட்டது. இனிமேல் மாதந்தோறும் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை தவறாமல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடம் தொடர்பாக மீனவர்களின் கருத்துக்களை முழுமையாக அறிந்தே நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு காரணமாகவே அமலிநகரில் தூண்டில் வளைவு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. அமலிநகரில் விரைவில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான அனைத்து பணிகளும் நடந்து வருகிறது' என்று கூறினார்.
மீனவர்கள் வாக்குவாதம்
மேலும் கூட்டத்தில் மீனவர்கள் கருத்துக்களை கேட்டறிவதற்காக பாரம்பரிய மீனவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி விளக்கம் அளித்தும், மீனவர்களுக்கு இடையே சிறு வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறு சலசலப்பு உருவானது. அப்போது, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் எழுந்து, மீனவர்கள் குறைகளை, கருத்துக்களை அமைதியான முறையில், சரியான வழியில் தெரிவித்தால் அதிகாரிகள் உரிய பதிலை அளிப்பார்கள். எனவே, மீனவர்கள் குறைகளை அமைதியாக தெரிவிக்க வேண்டும்'் என்று கூறினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் விஜயகராவன், மோகன்ராஜ் மற்றும் அலுவலர்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.