ஆண்டிப்பட்டியில் 31 மாணவர்களுக்கு கொரோனா; அரசு பள்ளி மூடல்

ஆண்டிப்பட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அந்த பள்ளி மூடப்பட்டது

Update: 2022-07-08 15:06 GMT

தொற்று பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் கண்டிப்பாக முக கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதையொட்டி சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டி பகுதியில் நோய் தடுப்பு பணி நடந்தது. அப்போது ஆண்டிப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது தெரிந்தது.

31 மாணவர்களுக்கு கொரோனா

இதையடுத்து மாணவர்களுக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். பின்னர் 72 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நேற்று 12 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் மாணவர்களின் பெற்றோருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் முடிவு இன்று வெளியானது. இதில் மேலும் 19 மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் 9 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர்களும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக அந்த பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

பள்ளி மூடல்

அதன்படி பள்ளி வகுப்பறை மற்றும் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் நாளை(சனிக்கிழமை) முதல் வருகிற 11-ந்தேதி வரை 3 நாட்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனால் பள்ளி மூடப்பட்டது. இதன் காரணமாக ஆண்டிப்பட்டி நகர் மற்றும் கொரோனா பாதிக்கப்பட்ட பிற பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிப்பு, பிளீச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 31 மாணவர்கள் உள்பட 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்