5-ந் தேதி வைகையில் எழுந்தருள்கிறார்: கள்ளழகரின் தங்கக்குதிரை மதுரை வந்தது

சித்திரை திருவிழாவில் வைகையில் கள்ளழகர் எழுந்தருள தங்கக்குதிரை வாகனம் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் வந்து சேர்ந்தது.

Update: 2023-04-30 19:42 GMT

அழகர்கோவில்

சித்திரை திருவிழாவில் வைகையில் கள்ளழகர் எழுந்தருள தங்கக்குதிரை வாகனம் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் வந்து சேர்ந்தது.

சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இதில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏற்கனவே நடந்துவரும் நிலையில், கள்ளழகர் கோவிலில் இன்று(திங்கட்கிழமை) விழா தொடங்குகிறது.

நாளை மறுநாள் (3-ந் தேதி) மாலையில் மதுரைக்கு தங்கப்பல்லக்கில் கள்ளழகர் புறப்படுகிறார். 4-ந் தேதி மூன்று மாவடியில் எதிர் சேவையும், 5-ந் தேதி கள்ளழகர் அதிகாலையில் 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடக்கிறது.

6-ந் தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் காட்சி தருகிறார். இதை தொடர்ந்து மாலையில் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருகிறார். அன்று இரவு தசாவதார காட்சி நடைபெறும். 7-ந் தேதி மதியம் ராஜாங்க திருக்கோலமும், அன்று இரவு பூப்பல்லக்கு விழாவும் நடக்கிறது. 8-ந் தேதி காலையில் கள்ளர் திருக்கோலத்துடன், அழகர்மலைக்கு திரும்புகிறார். அன்றிரவு அப்பன்திருப்பதியில் திருவிழா நடைபெறும். 9-ந் தேதி காலையில் கள்ளந்தரி வழியாக இருப்பிடம் சேருகிறார். 10-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

வாகனங்கள் வந்து சேர்ந்தன

அழகர்கோவில் சித்திரை திருவிழாவின் முன்னோட்ட நிகழ்வாக நேற்று காலையில், கள்ளழகர் கோவிலில் இருந்து அழகரின் வாகனங்கள் லாரியில் ஏற்றப்பட்டு மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு குதிரை வாகனமும், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சேஷ வாகனமும், வைகை ஆறு தேனூர் ராயர் மண்டபத்தில் கருட வாகனமும் வந்து சேர்ந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்