2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு

தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு

Update: 2022-11-01 20:11 GMT

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காத்திருப்பு போராட்டம்

ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சமீபத்தில் விடுத்த சுற்றறிக்கையில் மாநகராட்சி, நகராட்சிகளில் அடிப்படை சேவை பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், குடிநீர் வழங்கல் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகளை இயக்கி பராமரித்தல், கழிவு நீர் அகற்றுதல், தெரு விளக்குகளை பராமரித்தல் போன்ற பணிகளை அவுட்சோர்சிங் ஒப்பந்த முறையில் மேற்கொள்ள அறிவுறுத்தியது.

இதனை எதிர்த்தும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2-வது நாளாக...

இதைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் சிவகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, உங்களது கோரிக்கை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என உறுதியளித்தனர். மேலும் நேற்று முன்தினம் நடந்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலும் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், நேற்று 2-வது நாளாக தற்காலிக தூய்மை பணியாளர்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறும்போது, 'தமிழக அரசு தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் என்ற உத்தரவை திரும்ப பெறும் வரை, நாங்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றார்.

தற்கொலை முயற்சி

இதற்கிடையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர் மோகன் ராஜ் என்பவர் மாநகராட்சி அலுவலகம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சக ஊழியர்கள் மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதால் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் குப்பைகள் அகற்றும் பணி, சாக்கடை அடைப்புகள் சீரமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்து அடிப்படை தூய்மை பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்