ஒருபுறம் தண்ணீர்; மறுபுறம் கருகும் நெற்பயிர்கள்
ராமநாதபுரம் அருகே கண்மாயில் தண்ணீர் இருந்தும் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை என்று தேர்த்தங்கல் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகே கண்மாயில் தண்ணீர் இருந்தும் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை என்று தேர்த்தங்கல் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கருகும் நெற்பயிர்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் வைகை தண்ணீர் பாயும் கண்மாய் பாசனம் தவிர மற்ற இடங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் கருகி பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் அனைவரும் தங்களுக்கு நிவாரணமும், பயிர்காப்பீடு முழுமையாகவும் கிடைக்க வேண்டும் என்றும், பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள பறவைகள் சரணாலயமான தேர்த்தங்கல் பகுதியில் ஏராளமான ஏக்கர் நெல் விவசாயம் மழையின்றி கருகி போய் வருகிறது. நெல்மணிகள் முளைக்க தொடங்கும் முன்னரே பயிர்கள் வாடிவிட்டன. வழக்கமாக இதுபோன்ற சமயங்களில் இந்த பகுதியில் நெல்மணிகள் நன்றாக விளைந்து கதிர் அறுவடை சுறுசுறுப்பாக மேற்கொள்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மழையின்றி நெற்பயிர்கள் கருகி விட்டதால் கருகிய பயிர்களை விவசாயிகள் கவலையுடன் பார்த்து கண்ணீர் வடித்து வருகின்றனர்.
தண்ணீர் தர மறுப்பு
இதுகுறித்து தேர்த்தங்கல் பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் கூறியதாவது:-
கடந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்தது. வைகை தண்ணீரும் போதிய அளவில் வந்தது. மழை நன்றாக பெய்த காரணத்தினால் நெற்பயிர்களுக்கு போதுமானதாக இருந்தது. அதிக விளைச்சல் ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு மழை இல்லாமல் போய்விட்டது. இதனால் பயிர்கள் வாடி கருகிவிட்டன. கடன் வாங்கி பயிரிட்ட நெற்பயிர் கருகியதை எங்கள் கண்களால் பார்க்க முடியவில்லை. எங்கள் பகுதியில் உள்ள தேர்த்தங்கல் கண்மாயில் தண்ணீர் உள்ளது. ஆனால் பறவைகள் சரணாலயம் என்பதால் தண்ணீரை வயலுக்கு பாய்ச்ச வனத்துறையினர் மறுத்துவிட்டனர். இதனால் வயலுக்கு அருகில் தண்ணீர் இருந்தும் பயிர்களை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலைதான் தற்போது எங்களின் நிலை.
இவ்வாறு அவர் கூறினார்.
தண்ணீரை எடுக்க அனுமதியில்லை
தேர்த்தங்கல் கண்மாயில் தண்ணீர் இருந்தபோதிலும் வயலுக்கு பாய்ச்ச முடியாத நிலை குறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-
பொதுவாக பறவைகள் சரணாலயங்களில் உள்ள தண்ணீரை எடுக்க யாருக்கும் அனுமதி கிடையாது. அவசர அவசியம் கருதி குடிநீர் தேவைக்காக எடுக்க அனுமதிக்கலாம். வயலுக்கு பாய்ச்ச அனுமதிக்க முடியாது. ஏனெனில் பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகள் வருவதே நீரில் உள்ள புழு பூச்சிகளை உண்பதற்காகத்தான். இதற்காகத்தான் அரசிடம் நிதி பெற்று கண்மாயில் தண்ணீரை சேமிக்க வெட்டுக்கால்வாய் அமைத்துள்ளோம். மழையின்றி போனதாலும், சுற்றியுள்ள பகுதியில் நெல்மணிகள் இல்லாததாலும் இந்த ஆண்டு பறவைகள் வரத்து குறைந்துள்ளது. இருக்கின்ற பறவைகளுக்கான உணவுத்தேவைக்காக தண்ணீரை பாதுகாத்து வருகிறோம்.
தற்போது கண்மாயில் உள்ள சிறிதளவு தண்ணீரை வைத்து கருகிய பயிர்களை காப்பாற்ற முடியாது. ஒருமுறை பாய்ச்சினாலே தண்ணீர் வற்றிவிடும். ஆனால், பயிர்களை காப்பாற்ற அதிக தண்ணீர் தேவை. பறவைகளுக்காக ஆண்டாண்டு காலமாக பட்டாசு வெடிப்பதை தியாகம் செய்யும் மக்கள் இந்த ஆண்டு தண்ணீரை தியாகம் செய்வார்கள் என்று நம்புகிறோம். இனிவரும் காலங்களில் வைகை தண்ணீரை தேர்த்தங்கல் சரணாலய கண்மாய்க்கு கொண்டு வந்து சேர்க்க தனியாக வெட்டுக்கால்வாய் அமைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.