கூடலூர்- ஓவேலி சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு
கூடலூர்- ஓவேலி சாலையில் அரசு பஸ்சை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக காட்டு யானை பஸ்சை கடந்து சென்றதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
கூடலூர்
கூடலூர்- ஓவேலி சாலையில் அரசு பஸ்சை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக காட்டு யானை பஸ்சை கடந்து சென்றதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
காட்டு யானைகள் முகாம்
கூடலூர் தாலுகா பகுதியில் கோக்கால் மலையடிவாரம், தேவாலா, ஓவேலி உள்பட பல இடங்களில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது. தொடர்ந்து ஊருக்குள் அடிக்கடி வருகிறது. கூடலூர் கோக்கால் மலையடிவாரத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக 8 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. பின்னர் தனியார் எஸ்டேட் வழியாக நடந்து சென்று கூடலூர் ஓ வேலி சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து வருகிறது.
இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் கூடலூரில் இருந்து எல்லமலைக்கு பயணிகளுடன் அரசு பஸ் ஓவேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஒத்தக்கடை பகுதியில் சென்ற போது சாலையோரம் காட்டு யானை நின்று கொண்டிருந்தது.
அரசு பஸ்சை வழிமறித்தது
அப்போது அந்த வழியாக வந்த லாரியை காட்டு யானை தாக்க முயன்றது. இருப்பினும் லாரி வேகமாக சென்றது. ஆனால் அதன் பின்னால் அரசு பஸ் வருவதைக் கண்டு காட்டு யானை நடுரோட்டில் முன்னேறி வந்தது. இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். தொடர்ந்து காட்டு யானை பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைக்க முயன்றது.
இருப்பினும் லாவகமாக டிரைவர் பஸ்சை திருப்பியவாறு ஓட்டினார். பின்னர் காட்டு யானை பஸ்சின் பக்கவாட்டு வழியாக சென்று தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. அதன் பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து பயணிகள் கூறும்போது, காட்டு யானை திடீரென பஸ்சை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதனால் எந்த நேரத்திலும் தாக்கி விடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாரையும் ஒன்றும் செய்யாமல் காட்டு யானை அங்கிருந்து சென்று விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.