கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் 2 குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாம்-குன்னூர் சாலையில் கரடி உலா
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாமிட்டுள்ளன. இதேபோல் கரடி ஒன்று சாலையில் உலா வந்தது.
கோத்தகிரி
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாமிட்டுள்ளன. இதேபோல் கரடி ஒன்று சாலையில் உலா வந்தது.
காட்டு யானைகள்
நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகள் பசுமைக்குத் திரும்பி வருகின்றன. மேலும் கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பலா மரங்களில் தற்போது சீசன் காரணமாக பலாப் பழங்கள் காய்த்து குலுங்கி வருகிறது. இவற்றை திண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அடிக்கடி உலா வருவதுடன், சாலையோரங்களில் நின்ற வண்ணம் உள்ளது.
புகைப்படம் எடுத்த வாகன ஓட்டிகள்
இந்தநிலையில் முள்ளூரில் இருந்து தட்டப்பள்ளம் செல்லும் மேட்டுப்பாளையம் பிரதான சாலையின் ஓரத்தில் 2 குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன. இதைக் கண்ட அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி ஆர்வத்துடன் யானைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துச் சென்றனர். இதே போல நேற்று நள்ளிரவு நேரத்தில் கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கிருஷ்ணாபுதூர் பகுதியில் கரடி ஒன்று உலா வந்தது. இரவு ரோந்துப்பணியில் இருந்த போலீசார் அந்த கரடியை வீடியோ எடுத்தனர்.
தற்போது கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளார்கள்.