ஜூலை 11-ந் தேதி மீண்டும் அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது
ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வருவதற்காக ஜூலை 11-ந் தேதி மீண்டும் அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது. கடும் அமளிக்கிடையே ஓ.பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்து வந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒற்றை தலைமை நீக்கப்பட்டது.
இரட்டை தலைமை
அதாவது பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டுபுதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை பதவி உருவாக்கப்பட்டது.
2017-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர். அப்போது, தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் அ.தி.மு.க. இருந்து வந்ததால், உள்கட்சிக்குள் எதுவும் பிரச்சினை ஏற்படவில்லை.
விஸ்வரூபம் எடுத்த ஒற்றை தலைமை
ஆனால், கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, எதிர்க்கட்சி வரிசைக்கு சென்ற அ.தி.மு.க. வில் உள்கட்சி பூசல் வெடித்தது. எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதில் இருந்தே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் உருவானது.
இந்த மோதல் தற்போது ஒற்றை தலைமை கோஷத்துடன் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று கூடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஒற்றை தலைமையை மீண்டும் கொண்டுவந்துவிட எடப்பாடி பழனிசாமியும், இரட்டை தலைமையே நீடிக்க ஓ.பன்னீர்செல்வமும் முயற்சி மேற்கொண்டனர்.
அ.தி.மு.க. பொதுக்குழு
ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகியதால், அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.
இதில் ஐகோர்ட்டு வழங்கிய முதல் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக அமைந்தாலும், 2-வது தீர்ப்பு ஆதரவாக அமைந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று காலை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெற்றது.
கையெழுத்து போடவில்லை
இந்த கூட்டத்தில் பங்கேற்க மொத்தம் 2,665 செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காலை 8 மணி முதலே நிர்வாகிகள் வரத் தொடங்கினார்கள். 75 மாவட்ட நிர்வாகிகளும் தனித்தனியாக கையெழுத்து போட மேஜை அமைக்கப்பட்டிருந்தது.
பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களில் ஒரு சிலர் முதலில் கையெழுத்து போட்டு சென்றனர். ஆனால் சற்று நேரத்தில் யாரும் கையெழுத்து போட செல்லவில்லை. நேராக கூட்டம் நடக்கும் இடத்துக்கு சென்றனர். இதுகுறித்து, அவர்களிடம் கேட்டபோது, கட்சி மேலிடத்தில் இருந்து மாவட்ட செயலாளர்கள் மூலம் எங்களுக்கு கையெழுத்து போட வேண்டாம் என்று தகவல் வந்துள்ளதாக தெரிவித்தனர்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பு
கூட்டம் நடந்த அரங்கத்திலும், ஒற்றை தலைமை கோஷம் எதிரொலித்தது. முதலில் காலை 10.30 மணிக்கு பிரசார வேனில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அவருடன் வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் வந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் வந்தவுடன் அவரது ஆதரவாளர்கள் சிலர், ஆதரவு கோஷம் எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பதில் கோஷம் எழுப்பினார்கள். "வேண்டும்.. வேண்டும்.. ஒற்றை தலைமை" என்றும், உள்ளே வராதே என்றும் கோஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உற்சாக வரவேற்பு
அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், அங்குள்ள அறையில் காத்திருந்தார். சற்று நேரத்தில் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி. வந்தார். அவருக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் காலை 11.20 மணிக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி காரில் வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
எதிர்ப்பு கோஷம் - பதற்றம்
மேடைக்கு காலை 11.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வந்தவுடன் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. முதலில், மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செய்தார். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
அதே நேரத்தில், நிர்வாகிகள் மத்தியில் இருந்து, ஓ.பன்னீர்செல்வத்தை வெளியேற்றக்கோரி கோஷம் எழுப்பப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. உடனே, செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், அனைவரையும் அமைதி காக்க வலியுறுத்தினார்.
23 தீர்மானங்கள்
தொடர்ந்து, பொதுக்குழுவை தலைமை தாங்கி நடத்தி தருமாறு தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனை முன்மொழிந்து ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அதை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்.
அதன்பின்னர், கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள 23 தீர்மானங்களை முன்மொழிய அமைப்பு செயலாளர் பொன்னையனும், அதை வழிமொழிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் அழைக்கப்பட்டனர்.
நிராகரிப்பு
அந்த நேரத்தில், மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீரென 'மைக்' முன்பு வந்து, "அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகிறது" என்று ஆவேசமாக கூறினார்.
தொடர்ந்து, மகளிரணி செயலாளர் வளர்மதி வரவேற்புரை ஆற்றினார். ஆனால், அவர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை சொல்லவில்லை. அவர் தனது பேச்சின் இறுதியில், "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.." என்ற எம்.ஜி.ஆர். பாடலை பாடி, "ஒரு தலைவன் இருக்கிறார். அவர் விரைவில் வருவார்" என்று கூறினார்.
ஒற்றை தலைமை தீர்மானம்
அதன்பின்னர் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, "பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானங்களை, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நிராகரித்து விட்டார்கள். அப்படி நிராகரித்துவிட்ட பிறகு, அவர்கள் வைக்கும் ஒரேயொரு கோரிக்கை ஒற்றை தலைமை வரவேண்டும் என்பதுதான். அந்த ஒற்றை தலைமை தீர்மானத்துடன் இணைத்து, அடுத்து கட்சி தலைமை எப்போது பொதுக்குழுவை கூட்டுகிறதோ, அப்போது அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்" என்று கூறினார்.
கோரிக்கை மனு
அதனைத்தொடர்ந்து, மறைந்த கட்சி முன்னோடிகளுக்கும், முக்கிய தலைவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதன்பின்னர், அவைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. அதில், தற்காலிகமாக அவைத்தலைவர் பொறுப்பை வகித்த தமிழ்மகன் உசேன், அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "இந்த பொதுக்குழுவில் இரட்டை தலைமையை ரத்து செய்துவிட்டு, ஒற்றை தலைமையின்கீழ் தொண்டாற்றுவது சம்பந்தமாக விவாதித்து பதிவு செய்யவேண்டும். இந்த பொதுக்குழுவிலேயே அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை முடிவு செய்து அறிவிக்க வேண்டும்" என்பதை வலியுறுத்தி 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து போட்ட கோரிக்கை மனுவை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனிடம் வழங்கினார்.
ஜூலை 11-ந்தேதி மீண்டும் கூடுகிறது
தொடர்ந்து பேசிய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், ''2,190 பொதுக்குழு உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு ஒற்றை தலைமை குறித்த கோரிக்கையை, அதன் மீது பேசிய அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும், கட்சியின் நலன் கருதி அடுத்த பொதுக்குழு தேதியை இந்த கூட்டத்திலேயே அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வரும் ஜூலை 11-ந்தேதி காலை 9.15 மணிக்கு இதேபோல சிறப்பான ஒரு பொதுக்குழு கூட்டம் நடைபெறும். பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று இதை நான் அறிவிக்கிறேன்'' என்றார்.
இந்த நேரத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து எதிர்ப்பு தெரிவிக்க முயன்றார். அப்போது திடீரென கூட்டத்தில் இருந்து தண்ணீர் பாட்டில்கள் அவர் மீது வீசப்பட்டன. அதில், ஒரு பாட்டில் ஓ.பன்னீர்செல்வம் மீது பட்டது. உடனே, அவர் தொண்டர்களை பார்த்தார். அதன்பிறகும், தண்ணீர் பாட்டில்கள் கூடுதலாக அவரை நோக்கி வந்தன.
வெளிநடப்பு
உடனே, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் 'மைக்' முன்பு வந்தனர். அப்போது வைத்திலிங்கம் ஆவேசமாக, "சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் இந்த கூட்டத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம்" என்று கூறினார்.
இதனையடுத்து பெரும் அமளிக்கிடையே அங்கிருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்கள் அங்கீகாரம்
அதன்பிறகு, முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான எஸ்.பி.வேலுமணி நன்றி கூறினார். அப்போது அவர், 'எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்து விட்டார்கள். இன்றைக்கு ஏற்பட்டுள்ள எழுச்சி தி.மு.க. ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வருவார்' என்று தெரிவித்தார்.
இதனையடுத்து 35 நிமிடத்தில் கூட்டம் முடிவடைந்தது.
மொத்தத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சியும், ஓ.பன்னீர்செல்வத்தின் வீழ்ச்சியும் பட்டவர்த்தனமாக தெரிந்தது.