தருவைகுளம் கடற்கரை சாலையில் கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் அதிரடி கைது
தருவைகுளம் கடற்கரை சாலையில் கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ரோந்து
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரெட்ரிக் ராஜன மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கோவில் அருகே சந்தேகப்படும்படியாக சிலர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில, அவர்கள் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த மந்திரம் மகன் கோட்டைராஜ் என்ற சுந்தரம் (வயது 22), முருகன் மகன் விக்டர் (19), கொம்பையா மகன் கிருஷ்ணமூர்த்தி (19), நாங்குநேரி திருக்குறுங்குடியை சேர்ந்த சேகர் மகன் கோளாறு சுந்தர் என்ற சுந்தர் (24) மற்றும் தூத்துக்குடி ஆவுடையார் புரத்தை சேர்ந்த லிங்கம் மகன் பாலசுப்பிரமணியன் (22) என்பது தெரியவந்தது.
கஞ்சா பறிமுதல்
மேலும், அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கோட்டைராஜ் மீது ஏற்கனவே சென்னை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி, கஞ்சா, திருட்டு உள்ளிட்ட 7 வழக்குகளும், கோளாறு சுந்தர் என்ற சுந்தர் மீது நெல்லை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 3 வழக்குகளும், விக்டர் மீது ஒரு வழக்கும், கிருஷ்ணமூர்த்தி மீது 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.