குன்னூர்-கோத்தகிரி சாலையில்மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
குன்னூர்-கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூர்: குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மிதமான மழை, பலத்த மழையும் மாறி மாறி பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை குன்னூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. தொடர் மழைக்கு நண்பகல் 12.30 மணியளவில் குன்னூர்- கோத்தகிரி சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக டெப்போ அருகே நின்ற சாம்பிராணி மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மின்கம்பி மீதும், சாலையிலும் விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. இதுபற்றி மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் குன்னூர் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டு மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் கழித்து மரம் முழுவதுமாக வெட்டி அகற்றிய பின்னர் சாலையில் போக்குவரத்து தொடங்கியது.