சேரன்மாநகர் - தண்ணீர்பந்தல் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்குவது எப்போது?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சேரன்மாநகர் - தண்ணீர்பந்தல் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்குவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2022-10-21 18:45 GMT

சரவணம்பட்டி

சேரன்மாநகர் - தண்ணீர்பந்தல் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்குவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ரெயில்வே மேம்பால பணிகள்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட ஹோப் காலேஜ், தண்ணீர்பந்தல், சேரன்மாநகர் செல்லும் சாலையில் ரெயில்வே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தென்னக ரெயில்வே சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மேல் தளத்துடன் கூடிய தூண்கள் கட்டப்பட்டது. ஆனால் ரெயில்வே கேட்டிற்கு வடக்கிலும், தெற்கிலும் மாநில நெடுஞ்சாலைத்துறை பாலம் கட்டுவதற்கான கட்டுமான பணியை தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதேபோன்று இலகுரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்ல கீழ்மட்ட சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதற்கு சேலம் கோட்ட ரெயில்வே துறை அதிகாரிகளும் இடத்தை பார்வையிட்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால் தற்போது வரை அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

போக்குவரத்து நெரிசல்

இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. பாலம் கட்டுவதற்காக குழிகள் தோண்டப்பட்டதால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் அதிகரித்து வருகின்றது. தற்போது இந்த மேம்பாலத்திற்கான எந்த பணியும் நடைபெறாமல் பணிகள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- ரெயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் இந்த பணிகள் கிடப்பில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சாலைகள் முழுமையாக போடப்படாததால் சாலை முழுவதும் புழுதி பறக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக மேம்பாலம் மற்றும் சுரங்க பாதை கட்டுவதற்கான பணிகளை தொடங்கி போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆலோசனை

இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, சேரன்மாநகர், தண்ணீர் பந்தல் சாலையில் தொடங்கப்பட்ட ரெயில்வே மேம்பாலம் பகுதியில் போதுமான இட வசதி இல்லாததால் சுரங்கப்பாதை வழி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாலம் கட்டுவதற்கான பணி தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்