தமிழ் வளர்ச்சித்துறை சார்பில்விழிப்புணர்வு பட்டிமன்றம்
தேனி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விழிப்புணர்வு பட்டிமன்றம் நடந்தது.
தேனி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'தமிழ் ஆட்சிமொழி சட்டச் செயலாக்கத்தில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் காட்டும் ஆர்வம் போதுமானது! போதுமானதல்ல!' என்னும் தலைப்பில் விழிப்புணர்வு பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தின் நடுவராக வையைத் தமிழ்ச்சங்க நிறுவனர் இளங்குமரன் செயல்பட்டார். கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் ரதிதேவி வரவேற்றார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ தமிழ் ஆட்சிமொழி சட்டம் தொடர்பாக பேசினார்.
பட்டிமன்றத்தில் அரசு அலுவலர்களின் ஆர்வம் போதுமானது என்று ஆசிரியர்கள் முத்துக்குமார், சுகன்யா, மாணவர் மணிகண்டபிரபு ஆகியோரும், போதுமானதல்ல என ஆசிரியர்கள் லட்சுமிகுமரேசன், தாழைச்செல்வி, மாணவர் பாலகணபதி ஆகியோரும் பேசினர். ஆட்சி மொழிச் சட்டத்தை அரசு அலுவலர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஆனால் அந்த அரசாணைகளைச் செயல்படுத்துவதில் பெரும்பான்மையான அரசு அலுவலர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. காட்டியிருந்தால் வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகைகள் தமிழிலேயே இருந்திருக்கும்.
அரசு அலுவலர்களுடைய கையொப்பம் தமிழிலேயே இருந்திருக்கும். அரசு அலுவலகங்களில் பின்பற்றப்படுகின்ற கோப்புகள் தமிழிலேயே இருந்திருக்கும். எனவே, ஆட்சி மொழிச் சட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசுப் பணியாளர்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை என்பதற்கான பல்வேறு சன்றுகளை முன்வைத்துத் பட்டிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டது.