சிவசேனா கட்சி சார்பில்தனியார் காப்பீட்டு நிறுவனம் முற்றுகை
தேனியில் சிவசேனா கட்சியினர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி அரண்மனைப்புதூர் விலக்கு அருகில் ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் கிளை அலுவலகம் உள்ளது. அங்கு சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குருஅய்யப்பன் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகளும், வாடகை வாகன டிரைவர்கள் சிலரும் வந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நிறுவனத்தில் காப்பீடு செய்த வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது, அதற்கான காப்பீட்டு தொகையை வழங்காமல் முறைகேடு செய்வதாகவும், நிறுவனத்தை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது. அப்போது அவர்கள் காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். போராட்டம் செய்தவர்களிடம் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.