தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 9 தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிப்புலத் துறையில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் தமிழ்ஒளியின் மார்பளவு சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 27.2.2024 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் 2022, 2023-ம் ஆண்டுக்கான மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி சிறப்பு நேர்வாக இலக்கிய மாமணி விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட ஒன்பது தமிழறிஞர்களுக்கு அவ்விருதுகளை வழங்கி சிறப்பித்தார். மேலும், தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் தமிழ்ஒளியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.
கலைஞரின் பிறந்தநாளையொட்டி 3.6.2021 அன்று முதல்-அமைச்சரால் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், "இலக்கிய மாமணி" என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வரிசையில், 2022-ம் ஆண்டிற்கான விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட இலக்கியமாமணி விருதாளர்கள் - கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் அரங்க.இராமலிங்கம், (மரபுத்தமிழ்), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கொ.மா.கோதண்டம், (ஆய்வுத்தமிழ்), கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் சூர்யகாந்தன் (எ) மா.மருதாச்சலம் (படைப்புத்தமிழ்) ஆகியோருக்கும்;
கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக தெரிவு செய்யப்பட்ட இலக்கிய மாமணி விருதாளர்கள் - நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மணி அர்ஜூணன் (மரபுத்தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அர.திருவிடம் (ஆய்வுத்தமிழ்), சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த க.பூரணச்சந்திரன் (படைப்புத்தமிழ்) ஆகியோருக்கும்;
2023-ம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட விருதாளர்கள் - கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞா.மாணிக்கவாசகன் (மரபுத்தமிழ்), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் (ஆய்வுத்தமிழ்), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசன் (எ) ச.நடராசன் (படைப்புத்தமிழ்) ஆகியோருக்கும் முதல்-அமைச்சரால் இலக்கிய மாமணி விருதிற்கான ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்பட்டு, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டை முன்னிட்டு முதல்-அமைச்சர் 19.9.2023 அன்று அறிவித்தவாறு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிப்புலத் துறையில் 7 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் தமிழ்ஒளியின் மார்பளவு சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.