அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில்எங்கே எனது வேலை? என்ற வாகன பிரசாரம்
கம்பத்தில் அனைந்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சார்பில் எங்கே எனது வேலை என்ற வாகன பிரசாரம் நடந்தது.
தமிழகத்தில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். படித்த பட்டதாரி வாலிபர்கள் வேலை கிடைக்காமல் தவித்து வருவதால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதை கண்டித்து, தேனி மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சார்பில், எங்கே எனது வேலை? என்ற வாகன பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த வாகனம் தேனியில் தொடங்கி சின்னமனூர், உத்தமபாளையம் வழியாக கம்பம் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் எங்கே எனது வேலை? என்ற முழக்கத்தோடு சென்று வருகிறது.
அதன்படி, நேற்று கம்பம் வடக்கு போலீஸ் நிலையம் அருகே வாகன பிரசாரம் நடந்தது. அப்போது இந்திய கம்யூனிஸ்டு, ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் எங்கே எனது வேலை? வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்கு, அனைத்து அரசு காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், வேலையில்லா காலங்களில் மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம்செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் தமிழ் பெருமாள் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி கம்பம் நகர செயலாளர் கல்யாண சுந்தரம், கூடலூர் நகர செயலாளர் கர்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில பேச்சாளர் சிவாஜி பிரசாரம் செய்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.