மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில்சர்வதேச கடற்கரை தூய்மை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு காமராஜர் பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறை சார்பில் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

Update: 2023-09-16 21:08 GMT


சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு காமராஜர் பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறை சார்பில் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

கடற்கரை தூய்மை தினம்

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 3-வது சனிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டர்கள் கடற்கரையை தூய்மைப்படுத்தும் செயல்பாட்டில் பங்கேற்கின்றனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறை சார்பில், கடற்கரை தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், துறைத்தலைவர் ஆனந்த் வரவேற்றார். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக ஆற்றல் புலத்தின் (ஸ்கூல் ஆப் எனர்ஜி) தலைவர் கண்ணன், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் ஆனந்த் மற்றும் புதுமடம் பஞ்சாயத்து தலைவர் காமில் உசேன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு கடல் மற்றும் கடற்கரை பகுதியை தூய்மையாக வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உடல் நலத்துக்கு கேடு

அப்போது, கடல் மற்றும் கடலோர பகுதிகளில் சேரும் பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள் மூலம் வெளியேறும் மூலக்கருவான பாலித்தீன்கள், கடல் உயிரினங்களில் ஊடுருவி அதன் தசைகளில் சேர்ந்து விடுகிறது.இந்த உயிரினங்களை மனிதர்கள் உண்ணும் போது, 'பயோ-மேக்னபிகேஷன்' எனப்படும் விளைவால் மனிதர்களின் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுகிறது. மேலும், 'மெரைன் டெப்ரிஸ்' எனப்படும் கடல் குப்பைகளில், நமது வீடுகளில் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் தான் அதிகளவு காணப்படுகிறது. இவற்றை தவிர்க்க வேண்டும். மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வெளியே கொண்டு வரும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, புதுமடம் பகுதியில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில், கடற்கரை குப்பைகளை அகற்ற பள்ளி, கல்லூரிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர். அதாவது, செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செய்யது அம்மாள் அறிவியல் கல்லூரி, வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முகமது சதக் கல்லூரி மற்றும் புதுமடம் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்