செங்கல்சூளை அதிபர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீதுகுண்டர் சட்டத்தில் நடவடிக்கை மக்கள் குறைதீர்க்கும் முகாமில் குடும்பத்தினர் மனு
செங்கல்சூளை அதிபர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குறைதீர்க்கும் முகாமில் குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
நாகர்கோவில்:
செங்கல்சூளை அதிபர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குறைதீர்க்கும் முகாமில் குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். முகாமிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 172 போ் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவி கேட்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
அப்போது மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் ஸ்ரீதர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இதில் ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரை சேர்ந்த கொலை செய்யப்பட்ட செங்கல்சூளை அதிபர் ஏசுதாசன் மனைவி ஜெயா (வயது 49) மற்றும் அவரது உறவினர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் ஏசுதாசனை கடந்த மாதம் 9-ந் தேதியன்று அன்பு, விஜயன், மணிகண்டன், தங்க ஜோஸ் ஆகியோர் கொலை செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆரல்வாய்மொழி போலீசார் செயல்பட்டு வருகிறார்கள். என்னையும் எனது குடும்பத்தினரையும் தொடர்ந்து போலீசார் துன்புறுத்தி வருகின்றனர்.
எனவே அவர்கள் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகன்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். எனது கணவர் கொலை வழக்கில் உடனடியாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவர்கள் வெளியே வந்தால் எனது குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்படும். எனது மகனையும் கொலை செய்து விடுவார்கள். ஆகவே 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மனு
திக்கணங்கோடு வாளவிளை வீடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஸ்டெல்லா பாய் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவரும், நானும் மாற்றுத்திறனாளிகள். இலவச குடிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களாக எங்களுக்கு தண்ணீர் வந்தது. தற்போது எங்கள் வீட்டிற்கு வரும் பைப் லைனில் மட்டும் தண்ணீர் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எங்கள் வீட்டிற்கு தண்ணீர் வினியோகம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
நலத்திட்ட உதவி
மக்கள்குறைதீர்க்கும் முகாமில் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தொழிற்படிப்புக்கான கல்வி உதவித்தொகை ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை 3 மாணவர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.19 ஆயிரத்து 400 மதிப்பிலான வீல் சேர், முழங்கால் உறைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் 9 நபர்களுக்கு பாதுகாவலர் சான்றுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) திருப்பதி, மாவட்ட மாற்றுத்திறன் நல அலுவலர் சிவசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.