திருமங்கலம் அருகே ஆம்னி பஸ் மோதி ஐ.டி. ஊழியர் பலி - தந்தை கண்முன்னே பரிதாபம்

திருமங்கலம் அருகே ஆம்னிபஸ் மோதி தனது தந்தை கண்முன்னே ஐ.டி. ஊழியர் பலியானார்.

Update: 2023-05-18 21:40 GMT

திருமங்கலம்

திருமங்கலம் அருகே ஆம்னிபஸ் மோதி தனது தந்தை கண்முன்னே ஐ.டி. ஊழியர் பலியானார்.

கையை கிழித்தார்

விருதுநகர் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). இவரது மகன் புகழேந்திபாண்டியன் (27). சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மன உளைச்சல் அதிகரிக்கவே சொந்த ஊரான விருதுநகருக்கு வந்தார். இதனை தொடர்ந்து மதுரையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மாரியப்பன் தனது மகன் புகழேந்திபாண்டியனை மதுரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுவிட்டு மீண்டும் இரவு 9 மணியளவில் விருதுநகர் நோக்கி காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

வழியில் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் ராஜபாளையம் பிரிவு மேம்பாலத்தில் இயற்கை உபாதைக்காக காரை மாரியப்பன் நிறுத்தினார். அப்போது திடீரென புகழேந்திபாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து தனது கையை கிழித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாரியப்பன் மகனிடமிருந்து கத்திரிகோலை பறிக்க முயன்றார்.

பரிதாப சாவு

அப்போது ஆத்திரமடைந்த புகழேந்தி பாண்டியன் கத்திரிக்கோலை தராமல் காரை விட்டு கீழே இறங்கி நான்கு வழிச்சாலையில் தாறுமாறாக ஓடினாராம். அந்த நேரம் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற தனியார் ஆம்னிபஸ் எதிர்பாராத விதமாக புகழேந்தி பாண்டியன் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே தனது தந்தை கண்முன்னேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புகழேந்திபாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்