ஓம்கார காளியம்மன் கோவில் திருவிழா
ஓம்கார காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் இந்திரா நகரில் ஓம்கார காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 11-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கோவிலுக்கு பூஜை கூடை புறப்பாடு நடந்தது. அதனை தொடர்ந்து பெண் பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு வழிப்பட்டனர். பின்னர் மதியம் 1.30 மணியளவில் தண்ணீர் பந்தல் விநாயகர் கோவிலில் சக்தி அழைத்தல், அலகு போடுதல் நடைபெற்று பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கிடா வெட்டுதல் நடைபெற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்களும் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.