ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி இடமாற்றமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுப்பு
ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியை இடமாற்றம் செய்யும் எண்ணம் அரசுக்கு தற்போது இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் நேற்று யோகா மற்றும் இயற்கை மருத்துவ சுயநிதி கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
இதைத்தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டை பொறுத்தவரை 17 கல்லூரிகள் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளாக இயங்கி வருகின்றன. 17 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 993 பேரும், 2 அரசு கல்லூரிகளில் 160 பேரும் என மொத்தமாக 1,153 மாணவர் சேர்க்கை நடந்து வந்தது.
மேலும், 17 சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 557 இடங்கள் தமிழ்நாடு அரசின் தேர்வு குழுவால் நிரப்பப்பட்டு வருகிறது. ஆக மொத்தம் 1,710 இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்பட்டு வருகிறது.
பணிச்சுமை
ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை தள்ளிப்போவதாக சுயநிதி கல்லூரிகளின் நிர்வாகிகள் குற்றம் சாட்டி வந்தனர். நீட் தேர்வு மற்றும் கலந்தாய்வால் இந்த காலதாமதம் ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீட் தேர்வுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருவதால் நீட் தேர்வு முடிவுகள் வரும் வரையில் காத்திருக்காமல் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த உடன் கலந்தாய்வு நடத்த அனுமதிக்கலாம் என்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம், 1,710 இடங்களும் முழுமையாக நிரம்ப வாய்ப்பு உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் டாக்டர்கள் பணிச்சுமையால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்து மிகவும் தவறானது. காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் விரைவில் நிரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மாவட்ட நலவாழ்வு சங்கத்தினால் 500 புதிய டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இதேபோல கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு ஆஸ்பத்திரியில் தற்போது 30 இணைப் பேராசிரியர்கள், 100 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஒரு இயக்குனர், 2 உதவி நிலைய டாக்டர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். 757 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்படாது
புதிய மருத்துவ கட்டமைப்பு உருவாக்கப்படும்போது அதற்கேற்ப பணியிடங்களை அரசு உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. எனவே, ஏற்கனவே உள்ள பணியிடங்களில்தான் புதிய டாக்டர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது தவறான விவாதமாகும்.
11 புதிய மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகளை பொறுத்தவரை இதுவரை 7 புதிய மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகளில் மருத்துவச் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி இதே இடத்தில் செயல்படும். இதை இடமாற்றம் செய்யும் எண்ணம் தற்போது அரசுக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறை கமிஷனர் மைதிலி கே.ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.