விழுப்புரம் அருகேபழமையான புதிய கற்கால கருவி கண்டெடுப்பு
விழுப்புரம் அருகே பழமையான புதிய கற்கால கருவி கண்டெடுக்கப்பட்டது.
விழுப்புரம் அருகே உள்ள அத்தியூர்திருக்கை தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ், அதே கல்லூரியில் வரலாற்றுத்துறையின் முனைவர் பட்டம் ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு புதிய கற்காலத்தைச் சேர்ந்த இரண்டு கைக்கோடாரி கருவியை கண்டறிந்தனர். இந்த கோடாரி ஒரு புறம் கூர்மையாகவும், மறுபுறம் தட்டையாகவும் இருந்தது. இது சுமார் 5,000 ஆண்டுகள் பழமையானது. புதிய கற்காலத்தில் மனிதனின் விலங்கு வேட்டைக்கும், கிழங்கு போன்ற இயற்கை உணவுகளை தோண்டி எடுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர். இது போன்ற புதிய கற்கால ஆயுதங்கள் தமிழ்நாட்டில் மயிலாடும்பாறை, மாங்குடி, பையம்பள்ளி, கல்வராயன் மலை ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன என்று ஆய்வை மேற்கொகொண்ட ரமேஷ், இம்மானுவேல் ஆகியோர் தெரிவித்தனர்.