நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டுக்கு பூட்டு போட முயன்றதால் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டுக்கு பூட்டு போட முயன்றதால் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
பல்லடம்
பல்லடம் அருகே, கடனை வசூலிக்க வந்த நிதிநிறுவன ஊழியர்கள் வீட்டுக்கு பூட்டு போட முயன்றதால் மூதாட்டி தீக்குளிக்க முயன்றார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வங்கியில் கடன்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையம் காலனி பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மனைவி வேலாத்தாள் (வயது 60). கருப்புசாமி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதற்கிடையே வேலாத்தாள் திருப்பூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டின் பட்டாவை அடகு வைத்து 1 லட்சத்து 25 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அதற்கு இதுவரை அவரது குடும்பத்தினர் 1 லட்சத்து 80 ஆயிரம் வரை திருப்பி செலுத்திருப்பதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 4 மாத காலமாக வேலை ஏதும் இல்லாத காரணத்தால் தவணைத்தொகையை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலாத்தாளின் வீட்டுக்கு வந்த நிதிநிறுவன ஊழியர்கள், கடன் தொகை செலுத்தவில்லை என கூறி நோட்டீஸ் அளித்துள்ளனர். மேலும் நேற்று அந்த ஊழியர்கள் வீட்டிற்கு பூட்டு போட முயன்றதாகவும் கூறப்படுகிறது.
தீக்குளிக்க முயன்ற மூதாட்டி
தங்களது வீட்டை ஜப்தி செய்து விடுவார்களோ என்று மனவேதனை அடைந்த மூதாட்டி வேலாத்தாள், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் நிதி நிறுவன உழியர்களை சிறைபிடித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற பல்லடம் போலீசார் நிதி நிறுவன ஊழியர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.