மகன் இறந்த துக்கத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
மகன் இறந்த துக்கத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது 55). இவர் மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இவரின் தாயார் பாண்டியம்மாள் (வயது 75) அவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் பாண்டி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.
மேலும் நேற்று அவருடைய உடல்நிலை மோசமானதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கேள்விபட்ட அவருடைய தாயார் பாண்டியம்மாள் மிகுந்த வேதனை அடைந்தார். முதுமையால் வாழ்க்கையின் இறுதிகாலத்தை மகனின் ஆதரவில் கழித்து வந்த பாண்டியம்மாள் விரக்தி அடைந்தார். பின்னர் மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் பாண்டியம்மாள் தீ வைத்து கொண்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அவர் உடல் வெந்து பரிதாபமாக இறந்தார்.
மகனின் மரணத்தை தாங்கி கொள்ள முடியாமல் மூதாட்டி தாய் இறந்த சம்பவம், பாண்டியின் குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.