மின்சாரம் பாய்ந்து மூதாட்டி சாவு
கொண்டலாம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி இறந்தார்.
கொண்டலாம்பட்டி
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள அரியாம்பாளையத்தை சேர்ந்தவர் பச்சமுத்து. இவருடைய மனைவி சின்னத்தாய் (வயது 70). பச்சமுத்து இறந்து விட்ட நிலையில், மூதாட்டி சின்னத்தாய் விவசாய நிலங்களுக்கு சென்று, கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று காலை சின்னதாய் அருகே உள்ள பழனி கவுண்டர் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்கு வேலைக்கு சென்றார். அங்கு நீண்ட நேரமாக தண்ணீர் பாய்வதை பார்த்த அவர், மோட்டாரை நிறுத்த சென்றார். அந்த நேரம் மின் ஒயர் அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காத மூதாட்டி, வயரை மிதித்ததாக தெரிகிறது. இதில் அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் நிலைதடுமாறிய மூதாட்டி, அருகில் இருந்த எர்த் கம்பியை பிடித்தார். அப்போது மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் உடல் கருகிய நிலையில் அவர் அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியில் இருந்தவர்கள் கொண்டலாம்பட்டி போலீசார், மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று, மின்சாரத்தை துண்டித்தனர். போலீசார் சின்னதாய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.