வேடசந்தூர் அருகே கார் மோதி மூதாட்டி பலி
வேடசந்தூர் அருகே கார் மோதி மூதாட்டி பலியானார்.
வேடசந்தூர் அருகே உள்ள கொன்னாம்பட்டியை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 80). நேற்று காலை இவர், வேடசந்தூர் வந்துவிட்டு மீண்டும் கொன்னாம்பட்டி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். தம்மனம்பட்டிக்கு வந்த அவர், அங்குள்ள திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று பாப்பாத்தி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கிவீசப்பட்ட பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் நிற்காமல் சென்ற கார் குறித்து நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், அனைத்து நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அப்போது அந்த கார் கரூர் அருகே சென்றபோது, போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அந்த காரில் வந்தவர், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த தர்மர் (38) என்பது தெரியவந்தது. அவரிடம் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.