ஆடுமேய்க்கும் தகராறில் முதியவர் குத்திக்கொலை

தூத்துக்குடி அருகே ஆடுமேய்க்கும் தகராறில் முதியவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-07-24 18:45 GMT

தூத்துக்குடி அருகே ஆடுமேய்க்கும் தகராறில் முதியவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆடு மேய்க்கும் தொழிலாளி

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் நம்பி (வயது 70). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் ஏராளமான ஆடுகளை வளர்த்து வந்தார். இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று நம்பி வழக்கம்போல் தனது ஆடுகளை புதுக்கோட்டை அருகே தெய்வச்செயல்புரத்தை அடுத்த செட்டிமல்லன்பட்டியில் உள்ள காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

கத்திக்குத்து

அங்கு நம்பியின் தம்பி உறவுமுறையான ராமநாதபுரத்தைச் சேர்ந்த கணபதி மகன் சங்கிலிமாடன் (30) என்பவரும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வந்தார். அப்போது ஆடுகள் மேய்ப்பது தொடர்பாக நம்பிக்கும், சங்கிலிமாடனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சங்கிலிமாடன் கத்தியால் நம்பியை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் சங்கிலிமாடன் தப்பி ஓடி விட்டார்.

உறவினருக்கு வலைவீச்சு

பலத்த காயமடைந்த நம்பி ரத்த வெள்ளத்தில் சரிந்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த நம்பியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சங்கிலிமாடனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்