பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு கத்திக்குத்து

வடசேரி பஸ் நிலையம் அருகே சாலையோரம் கணவருடன் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2022-12-08 21:11 GMT

நாகர்கோவில்:

வடசேரி பஸ் நிலையம் அருகே சாலையோரம் கணவருடன் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

கணவருடன் தூங்கிய பெண்

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், அலுவலக பணியாளர்கள், தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்கள் வருவார்கள். அத்துடன் இரவு நேரத்தில் பஸ்நிலைய பகுதியில் ஏராளமானோர் தூங்குவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு வடசேரி பஸ் நிலையம் அருகே உள்ள நடைமேடை பகுதியில் கோட்டார் பகுதியை சோ்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு காட்டாத்துறையை சோ்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் வந்தார்.

முதியவருக்கு கத்திக்குத்து

அவர் சாலையோர நடைமேடையில் தூங்கி கொண்டு இருந்த பெண்ணின் அருகில் சென்றார். பின்னர் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, திடீரென பெண்ணிடம் சில்மிஷத்தில் செய்ய ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண், தூக்கத்தில் இருந்து கண்விழித்து சத்தம் போட்டார். உடனே அருகில் படுத்திருந்த கணவர் கண்விழித்து, முதியவரிடம் தகராறு செய்தார்.

அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த கணவர், அந்த முதியவரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதையடுத்து கணவன், மனைவி இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயமடைந்த முதியவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்