திண்டுக்கல் அருகே சரக்கு வேன் மோதி முதியவர் பலி
திண்டுக்கல் அருகே சரக்கு வேன் மோதி முதியவர் பலியானார்.
திண்டுக்கல்லை அடுத்த தோமையார்புரத்தில், திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் நேற்று முன்தினம் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று முதியவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட முதியவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்தார். இதுகுறித்து அடியனூத்து கிராம நிர்வாக அலுவலர் திருவருட்செல்வம், திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.