பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள ஆலாம்பாளையத்தை சேர்ந்தவர் அலிவன் (வயது 43). இவர் மளிகை கடை வைத்து உள்ளார். இந்த நிலையில் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்கு பொள்ளாச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மில் அருகில் வந்த போது திடீரென்று மோட்டார் சைக்கிளின் பின்புறம் உள்ள டயர் வெடித்தது. இதையடுத்து வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அந்த வாகனத்தில் வந்த ராசக்காபாளையத்தை சேர்ந்த பெரியமுத்துசாமி (78), பொள்ளாச்சி ஆறுமுகம் நகரை சேர்ந்த சண்முகசுந்தர் (57) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் பெரியமுத்துசாமி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். சண்முகசுந்தர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.