கார் கவிழ்ந்து முதியவர் பலி
திண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து முதியவர் பலி உறவினர்களை அழைத்துவர சென்னைக்கு சென்றபோது பரிதாபம்
திண்டிவனம்
புதுக்கோட்டை மாவட்டம் ராஜாகுளத்தூரை அடுத்த செம்பாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து(வயது 60). சம்பவத்தன்று இவரும், அவரது உறவினர் ரங்கநாதன் மகன் கிருஷ்ணன்(42) ஆகிய இருவரும் அந்தமானில் இருந்து வந்துள்ள உறவினர்களை அழைத்து வருவதற்காக வாடகை காரில் சென்னை விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். புதுக்கோட்டை கோல்டன் நகரை சேர்ந்த பாலையா மகன் மணி(25) என்பவர் காரை ஓட்டினார்.
நேற்று அதிகாலை திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்குப்பம் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் அங்குள்ள பாலத்தின் தடுப்பு கட்டையை இடித்துக்கொண்டு அருகே நின்ற வேப்ப மரத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த கிருஷ்ணன், டிரைவர் மணி ஆகிய இருவரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டா்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்து விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.