தக்கலை:
கேரள மாநிலம் பாறசாலை, கபரி பகுதியை சேர்ந்தவர் சரத்சந்திரன் நாயர் (வயது69). இவர் நேற்று முன்தினம் தக்கலை அருகே உள்ள குமாரகோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக குமாரகோவில் ஜங்சனில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்த சரத்சந்திரன் நாயர் மீதும், அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த தக்கலை பெருமாள் கோவில் சாலையை சேர்ந்த தினேஷ்குமார் (37) மீதும் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு சரத்சந்திரன் நாயரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும், தினேஷ்குமாரை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் சரத்சந்திரன் நாயர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தினேஷ்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் கார் டிரைவர் கேரள மாநிலம் பாலராமபுரம், நெல்லிவிளையை சோர்ந்த சக்தி ஷாஜன் (39) என்பவர் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.