மண்எண்ணெய் பாட்டிலுடன் முதியவர் தர்ணா
சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மண்எண்ணெய் பாட்டிலுடன் முதியவர் தர்ணாவில் ஈடுபட்டார்.
சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்துக்கு நேற்று காலை 11 மணியளவில் முதியவர் ஒருவர் மஞ்சள் பையுடன் வந்தார். பின்னர் அவர், பேரூராட்சி அலுவலக வாசல் முன் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் தான் கொண்டு வந்த பையில் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து கையில் வைத்து கொண்டு தீக்குளிப்பதாக மிரட்டல் விடுத்தார். பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை பறித்தனர். பின்னர் முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சின்னாளப்பட்டியை சேர்ந்த சுகுமார் (வயது 75) என்று தெரியவந்தது.
தனக்கு சொந்தமான 22 சென்ட் நிலத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ரசீது தர மறுப்பதாகவும், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சுகுமார் தர்ணாவில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், சுகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சுகுமாரின் மகன் ஆறுமுகத்திடம் பேசி தீர்வு காண்பதாக தெரிவித்ததையடுத்து அங்கிருந்து அவர் வீட்டுக்கு சென்றார்.