மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி பலியானார்.
வடமதுரை அருகே உள்ள நொச்சிக்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 70). தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்தார். நேற்று இவர், அய்யலூரில் உள்ள வங்கியில் சம்பள பணத்தை எடுப்பதற்காக சென்றார்.
எரியோடு-அய்யலூர் சாலையில், சித்துவார்பட்டி பிரிவு அருகே காளியம்மாள் நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி (29), பின்னால் அமர்ந்திருந்த அவருடைய தாய் பெரியக்காள் (48), மகள் ஜெயசாலினி (3) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து வடமதுரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்தில் பலியான மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.