டெங்கு கொசுப்புழுவை அழிக்க எண்ணெய் பந்து வீச்சு
மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் டெங்கு கொசுப்புழுவை அழிக்க எண்ணெய் பந்து வீசப்பட்டது.
தொடர் மழையின் காரணமாக காட்பாடியில் உள்ள காலிமனைகளில் தண்ணீர் குட்டை போல் தேங்கியுள்ளது. இதனால் டெங்கு கொசுப்புழுக்கள் உறுதியாக உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. அதனை தடுக்க வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில், 1-வது மண்டலத்துக்கு உட்பட்ட 15 வார்டுகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் எண்ணெய் பந்து வீசும் பணி நேற்று நடந்தது. எண்ணெய் பந்து போடுவதால் மழை நீரில் எண்ணெய் படர்ந்து கொசுப்புழுக்கள் சுவாசிக்க முடியாமல் இறந்து விடும். இதனால் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும்.
பொதுமக்களும் தங்கள் வீட்டு அருகே மழைநீர் தேங்கி இருந்தால் இதேபோல் செய்யலாம். குடி தண்ணீரை சேமித்து வைக்கும் பாத்திரங்களில் கொசு புகாத வண்ணம் மூடி வைத்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.