அதிகாரிகள்-ஆசிரியர் சங்கங்கள் பேச்சுவார்த்தை தோல்வி: நாளை போராட்ட அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.

Update: 2023-10-12 00:26 GMT

சென்னை,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். எண்ணும் எழுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். எமிஸ், டி.என்.எஸ்.இ.டி. உள்பட 43 வகையான பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) வருகிற 13-ந்தேதி (நாளை) போராட்டத்தை அறிவித்து இருந்தது.

இதையடுத்து போராட்டம் அறிவித்து இருந்த ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தை

சென்னை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் முத்துச்சாமி, தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தாச், தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் சேகர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் முத்துராமசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பிரதிநிதிகள் தியோடர் ராபின்சன், சண்முகநாதன், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் காமராஜ், ஜே.எஸ்.ஆர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ஜெகநாதன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரம் 30 நிமிடம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

திட்டமிட்டபடி போராட்டம்

ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்த 30 கோரிக்கைகளில், 9 கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வந்ததாகவும், ஆனால் அதை வாய்மொழியாகவே தெரிவித்து இருந்ததாகவும் பிரதிநிதிகள் கூறினர். மேலும் ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்யும் பணிகளுக்கு மாற்று வேலையாட்களை நியமிப்பதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கூறியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்த எழுத்துப்பூர்வமான அறிவிப்பை வெளியிடாததால், ஏற்கனவே திட்டமிட்டபடி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) போராட்டம் நடைபெறும் என்று ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவில் உள்ள தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் கூறினார்.

சமீபத்தில்தான் ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தியதில் அன்பழகனார் கல்வி வளாகம் ஸ்தம்பித்து போனது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆசிரியர் இயக்கங்கள் மீண்டும் போராட்டத்தை அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்