தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 77 டாஸ்மாக் பார்களுக்கு அதிகாரிகள் 'சீல்'

தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 77 டாஸ்மாக் பார்களுக்கு அதிகாரிகள் ‘சீல்' வைத்தனர்.

Update: 2023-05-24 21:00 GMT

தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 77 டாஸ்மாக் பார்களுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

டாஸ்மாக் பார்கள்

தேனி மாவட்டத்தில் மொத்தம் 90 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகள் அமைந்துள்ள பகுதியில் டாஸ்மாக் மதுபான பார் நடத்துவதற்கு டாஸ்மாக் நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும். இதற்கான உரிமம் பொது ஏலம் மூலம் வழங்கப்படும்.

அந்த வகையில் தேனி மாவட்டத்தில் 13 டாஸ்மாக் பார்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 77 டாஸ்மாக் கடைகளில் பார்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், இந்த 77 இடங்களிலும் அனுமதி பெறாமல் டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வந்தன.

இதுதொடர்பாக அரசுக்கும், டாஸ்மாக் நிறுவனத்துக்கும் பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 55 மதுபான பார்கள் மூடப்பட்டன. இந்தநிலையில், மூடப்பட்ட பார்களுக்கும், இதர அனுமதி பெறாத பார்களுக்கும் 'சீல்' வைக்க மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.

அதிரடி நடவடிக்கை

கலெக்டர் உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி செயல்பட்ட 77 டாஸ்மாக் பார்களுக்கும் நேற்று அதிரடியாக சீல்' வைக்கப்பட்டது. வருவாய்த்துறை, டாஸ்மாக் நிர்வாகம், போலீஸ் துறை இணைந்த குழுவினர் இந்த 'சீல்' வைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த பணிகளை கண்காணிக்கவும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. தேனி பகுதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் முன்னிலையில் பார்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டன.

மாவட்டத்தில் நேற்று காலை தொடங்கி மாலை வரை 'சீல்' வைப்பு பணிகள் நடந்தன. சில இடங்களில் அதிகாரிகள் 'சீல்' வைக்கச் சென்ற போதும் மதுபான பிரியர்கள் பார்களுக்குள் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தனர். இதனால் அவர்களை போலீசார் வெளியேற்றினர்.

'சீல்' வைத்தும் செயல்பட்ட பார்கள்

மாவட்டத்தில் சில டாஸ்மாக் பார்கள் சில மாதங்களுக்கு முன்பு 'சீல்' வைக்கப்பட்டன. அவ்வாறு 'சீல்' வைக்கப்பட்ட பார்களும் மீண்டும் அனுமதியின்றி இயங்கியது கண்டறியப்பட்டு மீண்டும் 'சீல்' வைக்கப்பட்டன. அதன்படி, மாவட்டத்தில் மொத்தமுள்ள 90 டாஸ்மாக் கடைகளில் உரிமம் பெற்ற 13 கடைகள் தவிர்த்து மீதமுள்ள 77 இடங்களிலும் மதுபான பார்கள் அனுமதியின்றி செயல்பட்டதாக 'சீல்' வைக்கப்பட்டது.

பல மாதங்களாக கண்டு கொள்ளாமல் இருந்த அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் 'சீல்' வைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அனுமதி பெறாமல் மதுபான பார்கள் நடத்தி, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், சீல் வைக்கப்பட்ட பார்கள் மீண்டும் அனுமதி பெறாமல் செயல்படக் கூடாது என்றும், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்