26 கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைப்பு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான 26 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
நாகர்கோவில்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான 26 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
எதிர்ப்பு
நாகர்கோவில் வடசேரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் செயல்படும் அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்துக்கு சொந்தமான சுமார் 39 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகள் பல ஆண்டுகளாக ஏலம் விடப்படாமல் இருந்து வந்ததாக அதிகாரிகளால் கூறப்படுகிறது.
ஒப்பந்த காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்தும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மறு ஏலம் விடுவதற்காகவும், 26 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி கடைகளை காலி செய்யுமாறு கூறியிருந்தனர். ஆனால் அவர்கள் கடைகளை காலி செய்யவில்லை எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நேற்று கடைகளை சீல் வைக்க விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு கடைகாரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குண்டு கட்டாக வெளியேற்றம்
இதனால் அதிகாரிகளுக்கும், கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர் மற்றும் வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஏற்கனவே இந்த கடைகளுக்கு பலமுறை கால அவகாசம் வழங்கி விட்டதாகவும், கடைகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் கடைக்காரர் ஒருவர் தனது கடைக்குள் அமர்ந்து விட்டு வெளியே வருவதற்கு மறுப்பு தெரிவித்தார்.உடனே போலீசார் அவரை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினார்.
அதைத்தொடர்ந்து அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோல் மீதமுள்ள 25 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைக்கும் பணியை மேற்கொண்டனர். கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.