சேலம் மாவட்டத்தில், 2-வது நாளாக 54 ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை
சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக 54 ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், செயற்கை நிறமூட்டி கலந்த 10 கிலோ சிக்கன் பிரியாணி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
2-வது நாளாக சோதனை
நாமக்கல்லை சேர்ந்த மாணவி கலையரசி (வயது 14) என்பவர் ஒரு ஓட்டலில் சவர்மா வாங்கி சாப்பிட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதன்படி, சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 67 ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் கெட்டுப்போன 266 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று 2-வது நாளாக மாவட்டம் முழுவதும் உள்ள 54 ஓட்டல்களில் சோதனை செய்தனர்.
200 கிலோ இறைச்சி பறிமுதல்
சேலம் மாநகரில் சீலநாயக்கன்பட்டி, ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியிலும், புறநகரில் ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், தலைவாசல் பகுதிகளிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது, 18 ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு சட்ட விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதாவது பழைய மற்றும் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கோழி இறைச்சி, 21 கிலோ பிரைடு சாதம், செயற்கை நிறமூட்டி கலந்த 10 கிலோ சிக்கன் பிரியாணி, 5 கிலோ மயோனைஸ், 800 கிராம் செயற்கை நிறமூட்டிகள், ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த 8 கிலோ மசாலா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் தடை செய்யப்பட்ட 4 கிலோ பிளாஸ்டிக் கவர்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்த இறைச்சிகளை பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. அதே நேரத்தில் 15 ஓட்டல்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 3 ஓட்டல்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சட்டப்படி நடவடிக்கை
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் கூறும் போது,' சேலம் மாவட்டம் முழுவதும் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். எனவே உணவு பாதுகாப்பு சட்ட விதி மீறல்கள் கண்டறியப்படும் உணவு நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மனிதர்களின் உயிர் மீது யாரும் விளையாட வேண்டாம். சுத்தமாகவும், சுகாதார முறையிலும் உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்' என்றார்.