ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் ஆய்வு அதிகமாக வசூலித்த கட்டணம் பயணிகளிடம் ஒப்படைப்பு

தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கூடுதலாக வசூலித்த கட்டணம் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டது.

Update: 2022-08-14 12:25 GMT

தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கூடுதலாக வசூலித்த கட்டணம் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை என்பதால் வெளியூர்களில் இருக்கும் பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். ரெயில், அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காததால் பலர் ஆம்னி பஸ்களில் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டினர்.

ஆனால் பயணிகளிடம் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வசூலிக்காமல் சில தனியார் பஸ்கள் கூடுதலாக கட்டணம் வசூலித்தனர். இதுகுறித்து அரசுக்கு பல்வேறு புகார்கள் சென்றது. இதையடுத்து சென்னையில் இது தொடர்பாக குழு அமைக்கப்பட்டது-. அந்த குழுவினர் பஸ்களில் சோதனை செய்தனர். அப்போது கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களுக்கு பணம் திரும்ப பெற்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பிஒப்படைப்பு

அதேபோல வேலூர் சரக துணை போக்குவரத்து ஆணையர் இளங்கோவன் உத்தரவின் பேரில், ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் செந்தில்வேலன் (வேலூர்), காளியப்பன் (வாணியம்பாடி, திருப்பத்தூர்), துரைச்சாமி (ஓசூர்), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார் (ராணிப்பேட்டை), மாணிக்கம் (வேலூர்) உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளில் பள்ளிகொண்டா உள்ளிட்ட சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள இடங்களில் ஆம்னி பஸ்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

சுமார் 130 ஆம்னி பஸ்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 27 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. மேலும், 7 ஆம்னி பஸ்கள் ரூ.19 ஆயிரத்து 400 கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது. அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணம் பயணிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டது.

இணக்க கட்டணமாக ரூ.42 ஆயிரத்து 500, பல்வேறு வரிகள் ரூ.2 லட்சத்து 62 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆய்வு விடுமுறைக்கு பின்னர் மீண்டும் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்