புயல் பாதுகாப்பு மையத்தில் அதிகாரிகள் ஆய்வு
பெருந்தோட்டம் பகுதியில் புயல் பாதுகாப்பு மையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவெண்காடு:
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக நேற்று அதிகாலை முதல் சீர்காழி, திருவெண்காடு மற்றும் பூம்புகார் பகுதியில் கன மழை பெய்தது. . கன மழையின் காரணமாக ஆங்காங்கே குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் லலிதா அறிவுரையின்படி சீர்காழி ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் சரவணன் ஆகியோர் எம்பாவை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த நீரை வடிய வைக்கும் பணிகளை கொட்டும் மழையும் பொருட்படுத்தாது பார்வையிட்டனர். மேலும் பெருந்தோட்டம் புயல் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டனர். அப்போது புயல் பாதுகாப்பு மையம் தயார் நிலையில் இருக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து மேலையூர், பூம்புகார், நெய்த வாசல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிகுமார், மோகனா ஜெய்சங்கர், சோமசுந்தரம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பால்ராஜ், திருநாவுக்கரசு, உதவி பொறியாளர்கள் சிவக்குமார், தெய்வானை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.