ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகை
வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் திருவிழா ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் திருவிழா ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த வருடம் ஆடிமாத பிரம்மோற்சவ விழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
பிரம்மோற்சவ விழா நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு கோவில் வளாகத்தில் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் செயல் அலுவலர் ராதாமணி வரவேற்று பேசினார்.
பொதுமக்கள் முற்றுகை
கூட்டத்தில் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட அப்பகுதி பொதுமக்கள் விழா காலங்களில் மட்டும் அரசு பஸ்களை வெட்டுவானம் தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தத்தில் நிறுத்துகின்றனர். மற்ற நாட்களில் நிறுத்துவதில்லை எனக்கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் சிறிது நேரம் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
தாசில்தார் ரமேஷ் விழாக் காலங்களை தவிர மற்ற நாட்களிலும் பஸ் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும் என உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அமைதியானார்கள். மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆடி பிரம்மோற்சவ விழா நடைபெற இருப்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கோவில் நிர்வாகம் செய்து தர வேண்டும் எனவும், தற்போது கொரோனா பரவி வருவதால் சுகாதாரத்துறை முழு வீச்சில் செயல்பட்டு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவருக்கும் முக கவசம் வழங்க வேண்டும் எனவும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
ஆக்கிரமிப்பு
மேலும் தேர் செல்லும் பாதைகளில் வேகத்தடைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. அதனை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய்த் துறையினர் தேர் செல்லும் பாதையில் ஆய்வு செய்தனர். அப்போது தேர் செல்லும் பாதைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதாகவும், ஆக்கிரப்புகளை வீட்டின் உரிமையாளர்கள் அகற்ற வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.