விருத்தாசலத்தில் சாலை மேம்பாட்டு பணிகளை அதிகாரி ஆய்வு
விருத்தாசலத்தில் சாலை மேம்பாட்டு பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
விருத்தாசலம்,
கடலூர்- விருத்தாசலம்-சேலம் நெடுஞ்சாலையில் விருத்தாசலம் நகரில் இருந்து மணவாளநல்லூர், கோமங்கலம், பரவலூர், தொரவலூர், நைனார்பாளையம், பெத்தாசமுத்திரம், பூண்டி வழியாக வி.கூட்டுரோடு வரை ரூ.28 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இதில் புதுக்கூரைப்பேட்டையில் இருந்து பெரியார் நகரை இணைக்கும் வகையில் ரூ.27 கோடியில் பல்லடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணியும் தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் நடக்கிறது. இப்பணிகளை சென்னை தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் பாலமுருகன் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து ஊ.மங்கலம், பரவலூர் மற்றும் விளாங்காட்டூர் பகுதியில் நடைபெறும் பணிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர், மழைக்காலம் தொடங்குவதற்குள் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திடவேண்டும் என பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது சென்னை தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ரவி, தர கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் இளங்கோவன், விருத்தாசலம் உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி கோட்ட பொறியாளர் தர கட்டுப்பாடு ராஜ்குமார் மற்றும் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.