ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கைஒன்றிய குழு கூட்டத்தில் அதிகாரி தகவல்

வனத்துறை அனுமதி கிடைத்ததும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியிலங் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-09-12 13:30 GMT

திருப்பத்தூர்

வனத்துறை அனுமதி கிடைத்ததும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியிலங் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஒன்றிய குழு கூட்டம்

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் கூட்டம் அதன் தலைவர் விஜியா அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணை தலைவர் டி.ஆர்.ஞானசேகரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் என் சங்கர் வரவேற்றார், கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:

சி. யுவராஜ் (அ.தி.மு.க.): பெருமாள்பட்டு பகுதியில் சுடுகாடு ஏற்படுத்தி தர வேண்டும். ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தினமும் ஏராளமானோர் வந்து குளிக்கின்றனர். அங்கு உடைமாற்றும் அறை இல்லை கழிபறை இல்லை. வனத்துறையினர் ஒவ்வொருவருக்கும் ரூ பத்து கட்டணம் வசூலிக்கிறார்கள். ஜலகாம்பாறை தமிழக அரசு சுற்றுலா தளமாக என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்களுக்கு வேண்டிய வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர்: பெருமாப்பட்டு சுடுகாட்டுக்காக வருவாய் துறை மூலம் இடம் கேட்டு உள்ளோம். ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களது அனுமதி வந்தவுடன் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும்

பிரித்து அளிக்கப்பட்டுள்ளது

டாக்டர் திருப்பதி (அ.தி.மு.க.) எனது வார்டுக்கு ரூ.4 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனது பகுதியில் 2 ஊராட்சிகள் உள்ளது. அடிப்படை வசதிகள் செய்ய போதுமான பணம் இல்லை.

டி.ஆர்.ஞானசேகரன் (துணைத் தலைவர்): தற்போது நிதி நிலைக்கேற்ப பணம் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது வருங்காலங்களில் நிதி அதிகப்படுத்தி தரப்படும்

கஸ்தூரிரகு, செந்தாமரை யுவராஜ் (தி.மு.க.): ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் யாரும் ஒன்றிய கவுன்சிலர்களை மதிப்பதில்லை.

வட்டார வளர்ச்சி அலுவலர்; ஊராட்சி செயலாளர்களுக்கு பலமுறை ஒன்றிய கவுன்சிலர்களை அழைத்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்புச்சுவர்

டி.ஆர்.ஞானசேகரன் (துணைத் தலைவர்):

குரிசிலாப்பட்டு உள்ளி வட்டம் பகுதியில் உள்ள பாம்பாற்று மேம்பால தடுப்பு சுவர்கள் கடந்த வருடம் பெய்த மழையினால் அடித்து செல்லப்பட்டு விட்டது. எனவே மேம்பால தடுப்புச் சுவர்களைக் கட்டி சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும்.

ஒன்றிய குழு தலைவர் விஜயா அருணாச்சலம்: பொதுப்பணி துறை நீர்வளத்துறை கடிதம் எழுதியுள்ளோம். மேலும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளோம். விரைவில் தடுப்பு சுவர் அமைத்து தரப்படும்.

துக்கன் (தி.மு.க.) புது நாடு பகுதிகளில் அரசுவீடுகள் கட்ட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் அரசுவீடு கட்ட பொதுமக்களிடம் பணம் கேட்கிறார்கள்.

வட்டார வளர்ச்சி அலுவலர்; வீடுகள் ஆன்லைன் மூலம் ஒதுக்கப்பட்டு வீடு கட்ட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தொந்தரவு செய்தால் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் தொடர்பு கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் உறுப்பினர்கள் எம்.ஜி.பூங்காவனம், பிருந்தாவதி வைகுந்தராவ், மஞ்சுளா ராமமூர்த்தி உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்‌.

முன்னதாக ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் செய்ய ரூ 1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக தலைவர் விஜியா அருணாச்சலம் தெரிவித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெ.மணவாளன் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்