ரேஷன்அரிசி கடத்திய காரை 10 கிலோமீட்டர் தூரம் விரட்டி பிடித்த அதிகாரிகள்

நாட்டறம்பள்ளி அருகே ரேஷன் அரிசி கடத்திய காரை சினிமா பாணியில் 10 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

Update: 2022-11-20 11:12 GMT

நாட்டறம்பள்ளி அருகே ரேஷன் அரிசி கடத்திய காரை சினிமா பாணியில் 10 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

வாகன சோதனை

நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார் தலைமையில் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாட்டறம்பள்ளி அருகே ஆந்திர மாநிலத்திற்கு காரில் ரேஷன் கடத்துவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாட்டறம்பள்ளி தாசில்தார் தலைமையில், வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த காரை பணியாண்டப்பள்ளி பகுதியில் இருந்து மூக்கனூர் வழியாக ஒரு வழி பாதையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்றனர்.

காரை மடக்கி பிடித்த அதிகாரிகள்

நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பூபதி கவுண்டர் தெரு பகுதியில் காரை மடக்கினர். உடனே டிரைவர் காரை நிறுத்தி விட்டு, சினிமா பாணியில் பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரில் ஏறி தப்பி ஓடிவிட்டார்.

அதைத்தொடர்ந்து காரை சோதனை செய்ததில் 20 மூட்டைகளில் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. அன்த அரிசியை காருடன் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். காரை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

சினிமா பாணியில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு காரை விரட்டிச்சென்று மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்