வீரபாண்டி
திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் கழிவுநீர் கலந்து வருவதாக நமது 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது அதனைத்தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆண்டிபாளையம் குளம்
ஆண்டிபாளையம் குளத்தை சுற்றி பூங்கா திருப்பூர் உள்ளூர் திட்டக் குழு நிதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட சேமிப்பு நிதி, கலெக்டரின் விரும்புரிமை நிதி உள்பட ரூ.1 கோடியே 22 லட்சத்து 80 ஆயிரத்தில் பூங்காவானது 2016-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. பூங்காவை சுற்றியும் வண்ண வண்ண மலர்ச் செடிகள், இயற்கை மூலிகை செடிகளும், நடுவில் செயற்கை நீரூற்று வடிவமைப்பும், வரவேற்பு பொம்மை மற்றும் சிறுவர்களின் விளையாடும் உபகரணங்கள் என சொர்க்க லோகம்போல் காட்சி அளித்தது.
இந்த பூங்காவிற்கு தினமும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை ஆண்டிபாளையம், சுல்தான்பேட்டை, மங்கலம், சின்னாண்டிபாளையம் ஆகிய பகுதியில் இருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து விளையாட விட்டு மகிழ்ந்தனர். ஆனால் தற்போது ஆண்டிபாளையம் குளம் மற்றும் பூங்காவனது பராமரிப்பின்றி மிகவும் பொலிவிழந்து காணப்படுகிறது.
கழிவு நீர்
இந்த நிலையில் ஆண்டிபாளையம் குளத்தில் நவீன வசதிகளுடன், படகுசவாரி நீர் விளையாட்டு அரங்கம் பார்வையாளர் மாடம் மற்றும் பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஒரு ரூ.1கோடியே 50 லட்சம் ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதனைத்தொடர்ந்து தற்போது பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மங்கலம் மற்றும் சுல்தான்பேட்டை பகுதியில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் நேரடியாக ஆண்டிபாளையம் குளத்தில் கலந்து வருவதாக 'தினத்தந்தி' நாளிதழில் கட்டுரை வெளியாகி இருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மங்கலம் சுல்தான்பேட்டை வழியாக வரக்கூடிய ராஜ வாய்க்காலை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஆண்டிபாளையம் குளம் பகுதியில் கழிவுநீர் கலக்கும் இடத்தில் நீரை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாரதிராஜா கூறும்போது "மங்கலம் பகுதியில் இருந்து ஆண்டிபாளையம் குளம் வரை கால்வாய் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்டிபாளையம் குளத்திற்கு வந்தடையும் நீரை சேகரித்து சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. மேலும் கழிவுநீர் குளத்தில் கலக்காதவாறு நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளை தொடங்கப்பட்டுள்ளது என்றார். குளத்தை ஆய்வு செய்தபோது பொதுப்பணித்துறை அதிகாரி முருகன் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.